மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற பாஜ எம்பி கங்கனா ரணாவத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: திரும்பி போ, திரும்பி போ! என கோஷமிட்டதால் பரபரப்பு
சிம்லா: உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்பட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மேக வெடிப்பு காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்கள் வௌ்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும், இமாச்சலபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் நிலச்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து விட்டனர். இமாச்சலில் உள்ள குலு மற்றும் மணாலியில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வௌ்ளம் ஏற்பட்டது.
இதில் அங்கிருந்த வீடுகள் சேதமடைந்தன. அங்குள்ள கடைகள் வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் பாஜ எம்.பி கங்கனா ரணாவத் மற்றும் பாஜ தலைவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை பார்க்க சென்றனர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க தாமதமாக சென்ற கங்கனா ரணாவத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் கருப்பு கொடி ஏந்தியவாறு, திரும்பி போ, திரும்பி போ என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.