மழைநீரில் மூழ்கிய நெற்பயிரைக் காக்க...
கடலூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 66800 எக்டர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழையினால் வயல்களில் நீர் தேங்கியிருக்கும் சூழல் உள்ளது. வயல்களில் நீண்ட நாட்கள் மழைநீர் தேங்கியிருக்கும்போது, போதிய காற்றோட்டம் இல்லாததாலும், மழைநீர் வடியும்போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து கரைந்து வெளியேறு வதாலும் பயிர்கள் மஞ்சள் நிறமாக காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய தண்ணீர் தேங்கியுள்ள வயலைச்சுற்றி நல்ல வடிகால் வசதியினை ஏற்படுத்தி அதிகமாக உள்ள தண்ணீரை வடிய வைக்க வேண்டும். இளம் பயிர்கள் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருந்தால், இருப்பில் உள்ள நாற்றுக்களை கொண்டு ஊடுபயிர் நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை களைந்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும். மழை, வெள்ளம் காரணமாக மூழ்கிய நெற்பயிரைக் காக்க நீர் வடிந்த பின் இலைகள் அழுகிடாமல் இருப்பின் 2 சதவீதம் டி.ஏ.பி, 1 சதவீதம் பொட்டாஷ் மற்றும் 1 சதவீதம் யூரியா, 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட் கரைசலை 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
மழைநீர் வடிந்ததும் தழைச்சத்து உரத்தை அம்மோனிய வடிவில் இடவும். யூரியா இடுவதாக இருந்தால் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன் வேப்பம் புண்ணாக்கு 5 கிலோவினை கலந்து, சிறிது நேரம் கழித்து ஜிப்சம் 18 கிலோவினை கலந்து ஒருநாள் இரவு வைக்க வேண்டும். நேரடியாக யூரியாவுடன் ஜிப்சத்தினை கலந்தால் நீர்த்து விடும். எனவே அதனைத் தவிர்க்க வேண்டும். சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகளையும் இலைவழியாகத் தெளிப்பாக அளிக்கவும்.நெல் வயல்களில் தொடர்ந்து மழைநீர் தேங்கியிருப்பதினால், நுண்ணூட்டச் சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்டக் கலவையை தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கி மட்கிய தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும். மேலும் இதுகுறித்த சந்தேகங்களுக்கு, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.