2 மணி நேர மழைக்கு 20 கி.மீ டிராபிக் ஜாம்: பாஜக அரசை விளாசிய காங்கிரஸ்
புதுடெல்லி: டெல்லி மற்றும் குருகிராமில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதுடன், இவ்விவகாரம் அரசியல் களத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, குருகிராம் நகரம் ஸ்தம்பித்தது.
டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள இஃப்கோ சவுக் போன்ற முக்கியப் பகுதிகளில் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாரத்தின் முதல் வேலை நாளில் பீக் ஹவர் போக்குவரத்துடன் மழையும் சேர்ந்துகொண்டதால், நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் நெரிசலில் சிக்கித் தவித்தனர். அரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய பயணத்திற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆனது.
பல இடங்களில் சாலைகளில் நான்கு அடி வரை தண்ணீர் தேங்கியதால், வெப்பத்திலிருந்து விடுதலை கிடைத்தாலும், போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்தச் சூழலில், கனமழை பாதிப்பைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தங்களது பணிகளை இணையவழியில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், வானிலை ஆய்வு மையம் இன்றும் மிகக் கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில், ‘2 மணி நேர மழைக்கு 20 கி.மீ. போக்குவரத்து நெரிசல்’ என்று குறிப்பிட்டு, முதலமைச்சர் விமானத்தில் பயணிப்பதால் மக்களின் துயரம் அவருக்குத் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
மேலும், ‘ஆயிரம் கோடி ரூபாய் நகரம்’ இன்று மூழ்கும் நகரமாக மாறிவிட்டதாகவும், குருகிராமின் பெயரை ‘குளம்கிராம்’ என்று மாற்றிவிடலாம் என்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். டெல்லி அரசின் திறமையின்மையே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.