சென்னையில் இன்று(அக்.14) தொடங்கும் மழை நாளை (அக். 15) முதல் 4 நாட்களுக்கு தீவிரமடையும் :தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
சென்னை : சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கும் மழை நாளை தீவிரமடையத் தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும். அக்டோபர் 15 - 18 முதல் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்.
கடலில் இருந்து மேகங்கள் நகர்வது ஒரு அழகான காட்சி. இன்று திடீர் மழையை அனுபவியுங்கள். சிறிய மேகங்கள்கூட 20-30 மிமீ மழையைப் பொழியும். தூத்துக்குடி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் வசிப்போர் இன்று முதல் அலுவலகத்திற்குச் செல்லும்போது குடை / ரெயின்கோட் எடுத்துச் செல்வது அவசியம். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒருநாளே இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், நாளை கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.