பனிப்பொழிவு மற்றும் பருவமழை காரணமாக பொள்ளாச்சியில் இளநீர் விற்பனை மந்தம்
பொள்ளாச்சி: பனிப்பொழிவு மற்றும் பருவமழை காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு இளநீர் அனுப்புவது சரிந்து, விற்பனை மந்தமானது. பண்ணை விலையும் குறைந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. இங்குள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. பொள்ளாச்சியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அதிகளவில் இளநீர் அனுப்பப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு மழை காரணமாகவும், டெல்லி, ஹைாபாத், மகாராஸ்டிரா, ஆந்திரா உளிட்ட வெளி மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக அப்பகுதிகளுக்கு, பொள்ளாச்சியிலிருந்து இளநீர் அனுப்பும் பணி கடந்த 2 வாரமாக மிகவும் குறைந்துள்ளது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் தற்போது இளநீர் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால், வெளியூர்களில் விற்பனை மந்தமானதால், வெளி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை, குறைந்து உள்ளது.
கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் குறைவான இளநீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. கடந்த மாதம் இறுதியில் பண்ணை விலை ரூ.38ஆகி இருந்தது. தற்போது ரூ.28 ஆக சரிந்து உள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிப்பதுடன், வெளி மாநிலங்களில் பனியும் ஓரளவு குறைந்தால் மட்டுமே, மீண்டும் பொள்ளாச்சியிலிருந்து அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.