கண்ணாமூச்சி காட்டும் மழையால் களக்காடு, திருக்குறுங்குடியில் நீரின்றி வறண்டு வரும் ஆறுகள், குளங்கள்
* பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
களக்காடு : களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. கடந்த வாரம் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது. ஆனால் களக்காடு பகுதிகளில் மழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது.
களக்காடு அருகில் பெய்த மழை களக்காடு ஊருக்குள்ளும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் பெய்யாமல் மறைந்தது, இதனால் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் கடும் வெயில் காணப்படுகிறது.
மழை தொடர்ந்து பெய்யாமல் இருப்பதால் வனப்பகுதிகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது. களக்காடு தலையணையிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதுபோல திருக்குறுங்குடி வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் நீர்வரத்து குறைந்து கொண்டே செல்கிறது. சிறிய ஓடையில் செல்வதை போல் தண்ணீர் ஓடுகிறது.
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் சோதனை சாவடி அருகே தடுப்பணையில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. திருமலைநம்பி கோயிலுக்கு செல்லும் ரோட்டில் மோர் மடம் கால்வாயில் தண்ணீர் வற்றியதால் பாறைகளாக காட்சி அளிக்கிறது. திருமலைநம்பி கோயில் படித்துறையையொட்டிய நம்பியாற்றுபகுதியிலும் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.
நம்பியாற்றில் நீர் வரத்து குறைவதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராடுவதில் பாதிப்பு ஏற்பட்டது. தென் மேற்கு பருவமழை விடை பெறும் நிலையில் போதிய மழை இன்றி களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் உள்ள குளங்களும், ஆறுகளும் நீரின்றி வறண்டு வருகிறது.
இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.