மழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் உஷார்நிலையில் உள்ளனர்: துணைமுதலமைச்சர்
சென்னை: மழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் உஷார்நிலையில் உள்ளதாக துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை நேரத்தில் மக்களுக்கு துணை நிற்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் இன்றைய தினம் காலை துணைமுதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் பேசினார். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சென்னை நுங்கம்பாக்கம் ஜெய்சங்கர் லேன் பகுதியில் மழை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், பேசிய அவர், மழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் உஷார்நிலையில் உள்ளனர். மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்கவைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடி மதிப்பில் விருகம்பாக்கம் கால்வாயை சீரமைக்கும் பணிகளை அண்மையில் தொடங்கி வைத்திருந்தோம். அந்தப்பணிகளை இன்று காலை ஆய்வு செய்து, அதன் தற்போதைய நிலை மற்றும் பணியில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம் என தெரிவித்தார்.