டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவில் பலத்த மழை; மீனவர்கள் முடக்கம்: உப்பு அனுப்பும் பணி பாதிப்பு
திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது. இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலை கொண்டது. இது மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. அதன்பிறகு விட்டு விட்டு தூறியது. வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு பகுதிகளில் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. இதனால் வேதாரண்யம் வேதாரண்யஸ்வரர் கோயில் வெளிபிரகாரம், உள் பிரகாரத்தில் ஒரு அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நின்றதால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். வேதை-திருத்துறைப்பூண்டி சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இதேபோல் மழை காரணமாக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் உப்பு அனுப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் டன் உப்பு தேக்கமடைந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, கொள்ளிடம், சீர்காழி, குத்தாலம், பாலாக்குடி, வில்லியநல்லூர், நீடூர், மணல்மேடு, பட்டவர்த்தி, செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது.
தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டையில் இன்று காலை சாரல் மழை பெய்தது. பெரம்பலூரில் நேற்றிரவு 7 மணி முதல் 9.30 மணி வரை மழை தூறியது. ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் நள்ளிரவில் லேசான மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துவங்குறிச்சி, முசிறி, தா.பேட்ைட பகுதியில் நேற்றிரவு மழை பெய்தது. இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலில் பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யத்தில் 27 மீனவ கிராமங்களை சேர்ந்த 8,000 மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 550 விசைப்படகுகள், 3,500 பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார், பழையாறில் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகளை சேர்ந்த 6,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 146 விசைப்படகு, 4,500 பைபர் படகுகளை சேர்ந்த 10,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் 500 விசைப்படகுகளை சேர்ந்த 2,000 மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.