ரயில்வே மேம்பால பணிகள் தீவிரம்; ஒழுகினசேரி பழையாற்று பாலம் விரிவுபடுத்தப்படுமா?: வாகன நெருக்கடியால் தொடரும் அவதி
நாகர்கோவில்: ஒழுகினசேரி பழையாற்று பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் ஒழுகினசேரியில் பழையாற்றின் மேல் மேம்பாலமும், அதன் அருகில் ரயில்வே பாலமும் அமைந்துள்ளது. இந்த பகுதி தான் மாநகரின் நுழைவு பகுதி ஆகும். இதில் பழையாற்றின் மேல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மிகவும் பழமையான மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்தை கடந்து தான் நாகர்கோவில் மாநகருக்குள் அனைத்து வாகனங்களும் வர வேண்டும்.
இந்த ஆற்றுப்பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரயில்வே பாலம் அமைந்துள்ளது. இதன் கீழ், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் பாதை செல்கிறது. தற்போது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கிறது. இதற்காக ஒழுகினசேரி பகுதியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2023 ல் தொடங்கியது. பணிகள் தொடங்கி சுமார் 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணிகள் முடிவடைய வில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரியில் பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்தனர். ஆனால் புதிய பாலம் செயல்பாட்டுக்கு வராமல், பழைய பாலத்தை இடிக்க கூடாது என மாநகராட்சி மேயர் மகேஷ், உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய பாலம் செயல்பாட்டுக்கு வரும் வரை பழைய ரயில்வே பாலம் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.
ஆனால் புதிய மேம்பால பணிகள் கிடப்பில் கிடந்தன. பாலத்தின் நடு பகுதியில் அமைப்பதற்கான கர்டர்களை பொருத்த முடிய வில்லை என கூறப்பட்டது. இதனால் பால சுவர்களை இடிக்க வேண்டிய நிலை வந்தது. இதையடுத்து கட்டுமான பணி முடிந்த பாலத்தில் சிறிய பகுதிகளை இடித்தனர். பின்னர் கர்டர்கள் பொருத்தும் வகையில், பாலத்தை சற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பணிகளை தொடர்ந்து கர்டர்கள் வைக்கப்பட்டு, தற்போது கான்கிரீட் போடும் பணிகள் நடக்கின்றன. இந்த பாலம் சென்னையின் நேப்பியார் பாலம் போல் அமைகிறது. கர்டர்கள் ெபாருத்தும் பணியின் போது கூட ரயில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட வில்லை. மிகப்பெரிய கிரேன்கள் கொண்டு வந்து, வேகமாக கர்டர்களை பொருத்தினர்.
தற்போது பணிகள் வேகமாக நடக்கின்றன. வரும் மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரயில்வே பாலம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய ரயில்வே பாலமும் இடிக்கப்படும் என தெரிகிறது. இரட்டை ரயில் பாதைக்காக பழைய பாலத்தில் இருந்த தூண்கள் ஏற்கனவே அகற்றப்பட்டு, தற்காலிகமாக தான் வலுவாக்கப்பட்டது. எனவே பழைய பாலம் இடிக்கப்படும் என்கிறார்கள். ரயில்வே புதிய பாலம் அமைத்து வருவத போல், ஒழுகினசேரி பழையாற்றில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் உள்ள ஆற்றுபாலமும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த பாலமும் தற்போது சேதம் அடைந்துள்ளன. இந்த பாலம் குறுகியதாகவும் உள்ளது. பாலத்தில் நடை பாதை வசதிகள் இல்லை. எனவே இந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும். ரயில்வே புதிய மேம்பாலத்துடன் இணையும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறி உள்ளனர். ஆற்றுப்பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டால், ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து குறையும் என்றும் வாகன ஓட்டிகள் கூறினர்.