மூடப்படாமல் கிடந்த ரயில்வே கேட் ரயிலை நிறுத்தி கீழே இறங்கி மூடுமாறு கூறிய லோகோ பைலட்: ராமநாதபுரம் அருகே பரபரப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மூடப்படாமல் இருந்த ரயில்வே கேட்டை கண்ட லோகோ பைலட், ரயிலில் இருந்து இறங்கி மூடச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென், வட மாநிலங்களில் இருந்து ரயில்கள்கள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் ராமநாதபுரம், வழுதூர் (வாலாந்தரவை), உச்சிப்புளி, பாம்பன் உள்ளிட்ட ரயில் நிலையங்களை கடந்து ராமேஸ்வரம் வந்து செல்கிறது. நேற்று காலை மதுரையிலிருந்து பாசஞ்சர் ரயில் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வழுதூர் ரயில்வே கேட் அருகே சென்றது. காலை 6.34 மணிக்கு ரயில்வே கேட் மூடப்படாமல் சிக்னல் கிடைக்காததால், வழுதூர் ரயில்வே கேட் அருகே ரயில் நின்றுள்ளது. உடனே லோகோ பைலட் இறங்கிச் சென்று கேட் கீப்பரிடம் கேட்டை மூடுமாறு கூறினார். அதன்பின் 5 நிமிடம் கழித்து ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதுகுறித்து கேட் கீப்பரிடம் கேட்டபோது, தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கேட்டை மூடவில்லை என தெரிவித்துள்ளார். லோகோ பைலட் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.