ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் லாரி ஒன்று சிக்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக, ஈரோட்டில் இருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களுக்கும் தினசரி ஏராளமான வாஙனங்கள் சென்று வருகின்றன. இவை தவிர, மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும் தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், நேற்றிரவு நாடார்மேடு பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் நோக்கி வந்த நூல் பேல் ஏற்றி வந்த லாரி ஒன்று, ரயில்வே நுழைவு பாலத்தில் இருந்த மழைநீர் வடிகால் கால்வாயில் சிக்கியது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, 45 நிமிடங்களுக்கு மேல் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், காளைமாடு சிலை ரவுண்டானாவிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, ரயில்வே நுழைவு பாலத்தில் உள்ள மழைநீர் வடிகால் மீது கம்பியாலான மூடி வைக்க வேண்டும் என்றும் அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.