விரைவில் ரயில் நிலையங்களுக்கு வருகிறது பிரபல உணவகங்கள்: ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறை வெளியீடு
* இந்த கடைகள் ஆன்லைன் ஏலம் மூலம் மட்டுமே அமைக்கப்படும். நேரடியாக யாருக்கும் இடம் கொடுக்க முடியாது.
சென்னை: ரயில் நிலையங்களில் விரைவில் கேஎப்சி, மெக்டொனால்டு, பாஸ்கின் ராபின்ஸ், பீட்சா ஹட், ஹல்திராம்ஸ், பிகானேர்வாலா போன்ற பிரபல உணவகங்களை பயணிகள் பார்க்க நேரிடும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பெரிய நிறுவனங்களின் உணவகங்களை அமைக்க ரயில்வே வாரியம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தற்போது டெல்லி, மும்பை, அகமதாபாத் போன்ற பெரிய நகரங்களில் உள்ளவை உட்பட 1,200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை ரயில்வே புதுப்பித்து வருகிறது.
இந்த நவீன நிலையங்கள் மிகவும் பெரியதாகவும், நவீன வசதிகளுடனும் கட்டப்படுவதால், இதுபோன்ற பிரபல உணவகங்களுக்கு எளிதாக இடம் கொடுக்க முடியும். இந்தியாவில் தினமும் சுமார் 2.3 கோடி பேர் ரயிலில் பயணிக்கின்றனர். அதிக பயணிகள் வரும் பல நிலையங்களில் இதுபோன்ற நல்ல தர உணவகங்களுக்கு நிறைய தேவை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த யோசனையை தெற்கு மத்திய ரயில்வே தான் முதலில் முன்வைத்தது.
இதுவரை ரயில் நிலையங்களில் மூன்று வகையான சிறிய கடைகள் மட்டுமே இருந்தன - தேநீர், காபி விற்கும் கடைகள், சிற்றுண்டி, தின்பண்டங்கள் விற்கும் கடைகள், பால், ஜூஸ் விற்கும் கடைகள். இவை அனைத்தும் சிறிய அளவிலான கடைகள் மட்டுமே. பெரிய நிறுவனங்களின் உணவகங்களை அமைப்பதற்கான வழிமுறைகளோ அனுமதியோ இல்லை. பயணிகளுக்கு குறைந்த விருப்பங்களே இருந்தன.
அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்ட புதிய உத்தரவின்படி, “பெரிய நிறுவன உணவகங்கள்” என்ற நான்காவது வகை கடை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே பிராண்ட் கொண்ட பெரிய நிறுவனங்கள் தங்கள் உணவகங்களை அமைக்கலாம். இந்த கடைகள் ஆன்லைன் ஏலம் மூலம் மட்டுமே அமைக்கப்படும். நேரடியாக யாருக்கும் இடம் கொடுக்க முடியாது. அதிக விலை கொடுப்பவர்களுக்கு ஏலத்தில் இடம் கிடைக்கும். ஒவ்வொரு கடையும் 5 வருடங்கள் செயல்பட அனுமதி கிடைக்கும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள், ரயில்வே நிலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான தற்போதைய ஒதுக்கீடு மாறாமல் இருக்கும். இந்த புதிய கடைகள் அவர்களின் வாய்ப்புகளை பாதிக்காது என்று ரயில்வே வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. அதிக பயணிகள் வரும் நிலையங்களில் மட்டுமே, தேவை இருக்கும் இடங்களில் மட்டுமே, போதுமான இடம் இருக்கும் நிலையங்களில் மட்டுமே இந்த உணவகங்கள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு ரயில்வே மண்டலமும் தங்களுடைய நிலையங்களில் எவ்வளவு தேவை உள்ளது, எவ்வளவு இடம் கிடைக்கிறது, எப்படி செயல்படுத்துவது என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும். அதன்படி ஒவ்வொரு நிலையத்திற்கும் தனி விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மாற்றத்தால் பயணிகளுக்கு நல்ல தரமான உணவு, பல விதமான உணவு வகைகள், சுத்தமான சூழல் ஆகியவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.