ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்டு சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
ஜபல்பூர்: மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் வெள்ளியன்று மாலை பயணிகள் ரயில் ஒன்று வந்துள்ளது. அதில் பயணம் செய்த பயணி ஒருவர் சமோசா வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை ஜிபே மூலம் செலுத்த முயற்சித்துள்ளார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் செலுத்தமுடியவில்லை. இதற்கிடையே ரயில் புறப்பட்டது. இதனால், அந்த பயணி சமோசாவை திருப்பி தந்துவிட்டு ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளார்.
ஆனால் அந்த விற்பனையாளர் அவரது சட்டையை பிடித்து இழுத்து, என்னை ஏமாற்ற பார்க்கிறாயா? என் நேரத்தை வீணாக்கிவிட்டாயே? வேறு யாருக்காவது சமோசா விற்று இருப்பேனே? அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இறுதியில் பயணி தனது கையில் கட்டியிருந்த வாட்சை கழற்றி கொடுக்க, அவரது கையில் சமோசாக்களை திணிக்க ஓடும் ரயிலில் ஏற பயணி முயற்சி செய்தார். இதனை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வீடியோ வைரலான நிலையில் ரயில்வே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட விற்பனையாளர் அடையாளம் காணப்பட்டு நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்பு படை மூலமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் இருந்த வாட்ச் சம்பந்தப்பட்ட பயணிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.