ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கான 4 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவைக் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ரூ.24,634 கோடியில் 4 மாநிலங்களில் 4 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் வார்தா - பூஷாவல் இடையேயான 314 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3வது மற்றும் 4வது ரயில் பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவின் கோண்டியா மற்றும் சட்டீஸ்கரின் டோன்கர்கர் இடையேயான 84 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4வது பாதை அமைப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் வதோதரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் இடையேயான 259 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3வது மற்றும் 4வது பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இடார்சி - போபால் - பினா இடையேயான 237 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4வது பாதை அமைக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த 4 திட்டங்களின் மூலம், ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 894 கிலோமீட்டர் அதிகரிக்கும்.