ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக அறிவிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல்
டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துர்கா பூஜை, தசரா மற்றும் தீபாவளி பண்டிகையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஒன்றிய ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இன்று போனஸ் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றிய ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் தெரிவித்தார்.
இந்த போனஸ் அறிவிப்பின் மூலமாக ஒன்றிய ரயில்வே துறையில் 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ரயில்வே ஊழியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு மொத்தம் ரூ.1,865.68 கோடி வரை போனஸ் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் தண்டவாளம் பராமரிப்பாளர், லோகோ பைலட்கள், ரயில்வே மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், சூப்பர்வைசர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட மொத்தம் 11 லட்சம் பேர் பயனடைய உள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 11 லட்சத்து 72 ஆயிரத்து 240 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2,028 கோடி போனஸ் வழங்கப்பட்டது. தற்போதைய அறிவிப்பால் ஒன்றிய ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.