தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்: நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ ரெயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு: பராமரிப்பு பணி காலம்: 20.10.2025 முதல் 24.10.2025 வரை. நேரம்: காலை 5 மணி முதல் 6 மணி வரை.இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்: மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமுமின்றி இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.