ராகுல்காந்திக்கு அவசர அவசரமாக நோட்டீஸ் அனுராக் தாக்கூருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை? தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி
புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பா.ஜ வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக பெங்களூரு மத்திய தொகுதியில் மகாதேவபுரா தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட ஆதாரங்களை அவர் வெளியிட்டார். இதையடுத்து பிரமாண பத்திரத்தில் கையெழுத்தி ட்டு புகார் அளிக்குமாறு ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதே போல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும், 2024 மக்களவை தேர்தலில் ராகுல், பிரியங்கா, அகிலேஷ், அவரது மனைவி டிம்பிள் உள்ளிட்டோர் போட்டியிட்ட தொகுதியிலும் வாக்கு சந்தேகம் உள்ளதாக முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பா.ஜ எம்பியுமான அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். ஆனால் ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், இன்னும் அனுராக் தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது:
போலி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். போலி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தான் மக்களவை தேர்தல் நடந்ததாக ஆளும் கட்சி எம்.பி. அனுராக் தாக்கூரும் நிரூபித்துள்ளார். பெங்களூரு மத்திய சட்டமன்றத் தொகுதியின் மகாதேவபுரா என்ற ஒரு தொகுதிக்கான தரவுகளைச் சேகரிக்க நாங்கள் ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். ஆனால் அனுராக் தாக்கூர் ஆறு நாட்களுக்குள் ஆறு மக்களவை தொகுதிகளின் மின்னணு வாக்காளர் பட்டியலை பெற்றுள்ளார்.
இது பா.ஜ மற்றும் தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதி இல்லையென்றால், வேறு என்ன? இந்த நாட்டில் தேர்தல்கள் போலி வாக்காளர்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்ற ராகுல் காந்தியின் கருத்தை நிரூபித்ததற்காக அனுராக் தாக்கூர் மற்றும் பாஜவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். வாக்காளர் பட்டியலின் மின்னணு தரவுகளை பாஜ ஏற்கனவே பெற்றிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கும் அதை தேர்தல் ஆணையம் தர வேண்டும்.
ஏனெனில் இந்தத் தரவு மூலம் பிரதமர் மோடி வாரணாசியில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்து இருக்கிறார் என்பதையும், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை அங்கு அதிகமாக இருப்பதையும் நிரூபிக்கும். எனவே வாரணாசி தொகுதியின் மின்னணு வாக்காளர் பட்டியல் தரவை தேர்தல் ஆணையமும் அனுராக் தாக்கூரும் வெளியிட வேண்டும்.
ஏனெனில் அனுராக் தாக்கூரிடம் இப்போது மின்னணு வாக்காளர் பட்டியல் உள்ளது.
வாரணாசியின் மின்னணு வாக்காளர் பட்டியலை நாங்கள் பெற்றால், வாக்குகளை திருடி மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பதை நிரூபிப்போம். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கின்றன, ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எங்கே?. பாஜவிற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான கூட்டுச் சதியை அனுராக் தாக்கூர் முழு நாட்டிற்கும் முன்பாக அம்பலப்படுத்தியுள்ளார்.
அதனால்தான் இப்போது முழு நாடும் ‘ ஓட்டு திருடனே, பதவியை விட்டு விலகு’ என்று கூறுகிறது. ஏனெனில் 2024 மக்களவைத் தேர்தல் போலி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது என்பதை பாஜவின் பத்திரிகையாளர் சந்திப்பு நிரூபித்துள்ளது. எனவே இந்தத் தேர்தல் மோசடியானதாக கருதப்பட வேண்டாமா? இந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டாமா?.
இந்த வாக்கு திருட்டு தொடர்பாக ஆகஸ்ட் 7 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்திய சில மணி நேரங்களுக்குள் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் அவரிடமிருந்து ஒரு பிரமாணப் பத்திரம் கோரப்பட்டது. அனுராக் தாக்கூர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
ஆனால் அவருக்கு எந்த நோட்டீசும் வரவில்லை.
தேர்தல் ஆணையத்திடம் மின்னணு வாக்காளர் பட்டியல் இருக்கும்போது, அது ஏன் காங்கிரசுக்கு வழங்கப்படவில்லை? தேர்தல் ஆணையத்திடம் மின்னணு வாக்காளர் பட்டியல் உள்ளது என்பது அனுராக் தாக்கூர் வெளியிட்ட 6 மக்களவை தொகுதி பட்டியல் மூலம் தெளிவாகிறது. அதை தேர்தல் ஆணையம் பொதுமக்களுடனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் அனுராக் தாக்கூர் வழங்கிய ஆதாரங்கள் இயற்கையில் குற்றவியல் தன்மை கொண்டவை.
இன்றைய கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை ஒரு துண்டு காகிதத்தைப் பெற்று, தங்களைத் தாங்களே குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். இந்த அரசை அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் குற்றச்சாட்டுக் கூண்டில் நாங்கள் நிறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.