ராகுல் காந்தி 4 நாள் வெளிநாடு பயணம்: மாணவர்களுடன் கலந்துரையாடல்
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் சென்று, அங்கு மாணவர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதன்ஒரு பகுதியாக ராகுல் காந்தி தற்போது தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா வௌியிட்ட அறிக்கையில், “மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தென்அமெரிக்க நாடுகளுக்கு 4 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களின்போது தென்அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் மற்றும் அரசியல் கட்சி மூத்த தலைவர்களிடம் கலந்துரையாடுவார். மேலும், பல்கலை கழக மாணவர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து தொழிலதிபர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி சென்றுள்ள நான்கு நாடுகள் எதுவென தகவல் வௌியிடப்படவில்லையெனினும், பிரேசில், கொலம்பியா நாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.