ராகுலை கண்டித்த உச்ச நீதிமன்றம் உண்மையான இந்தியர் யார் என நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது: பிரியங்கா காந்தி பதிலடி
புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லையில் சீனா 2,000 சதுர கிமீ நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாக கூறினார். இதுதொடர்பான வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உண்மையான இந்தியர் இப்படி பேச மாட்டார்’ என கண்டனம் தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர், ‘‘உச்ச நீதிமன்றத்தில் மரியாதைக்குரிய நீதிபதிகளுக்கு உரிய மரியாதையுடன் கூறிக் கொள்கிறேன். உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. இது நீதிபதிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது.
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தி கேள்வி கேட்பதும், அரசை சவால் செய்வதும் அவரது கடமை. ராகுல் காந்தி ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் எப்போதும் மதிக்கிறார். அவரது அனைத்து பேச்சுகளிலும் அது பிரதிபலிக்கிறது.
அரசை கேள்வி கேட்பது எதிர்க்கட்சி தலைவரின் பொறுப்பு என்பதால் அப்பணியை ராகுல் காந்தி செய்கிறார்’’ என்றார். இதே போல, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘‘ கேள்விகள் கேட்பதற்காக நாங்கள் தேச விரோதிகளாக முத்திரை குத்தப்படுகிறோம். ஆனால் தொடர்ந்து கேள்வி எழுப்பும் நாங்கள்தான் உண்மையான இந்தியர்கள்’’ என்றார்.