ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு; மாஜி முதல்வர் கமல்நாத் பாணியில் பழைய நாடகம்: தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்
டெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டில் கமல்நாத்தின் பழைய பாணியை ராகுல் காந்தி கையாளுகிறார் எனக் கடுமையாகச் சாடியுள்ள தேர்தல் ஆணையம், ஆதாரத்தைத் தராவிட்டால் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனச் சவால் விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து, முறைகேடாகச் சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை, உரிய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்குமாறு தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்குச் சவால் விடுத்தது.
குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களைத் தர வேண்டும் அல்லது தனது அபத்தமான குற்றச்சாட்டுகளுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்த ராகுல் காந்தி, ‘நான் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார். மேலும், தரவுகளின் அடிப்படையில் கேள்வி எழுப்பியதும், தேர்தல் ஆணையம் தனது இணையதளங்களையே முடக்கிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், மாநிலத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் இருந்து வாக்காளர் பட்டியல்கள் நீக்கப்படவில்லை என்றும், யார் வேண்டுமானாலும் அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் சமூக ஊடகத்தில் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், கடந்த 2018ம் ஆண்டில், ஒரே நபரின் புகைப்படம் 36 வாக்காளர்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுவிட்டது. தனியார் இணையதளத்தின் தவறான தகவலைக் கொண்டு நீதிமன்றத்தை அவர்கள் தவறாக வழிநடத்த முயன்றதால், உச்ச நீதிமன்றம் கமல்நாத்தின் கோரிக்கையை நிராகரித்தது. தற்போது, அதே தந்திரம் நீதிமன்றத்தில் எடுபடாது என்பதை அறிந்து, ராகுல் காந்தி மக்கள் மன்றத்தில் தவறான தகவல்களைப் பரப்புகிறார் எனத் தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.