தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரை பேரணியில் ராகுலுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: தேர்தல் ஆணையத்தை ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள் என குற்றச்சாட்டு

சென்னை: பீகாரில் நேற்று நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, தேர்தல் ஆணையத்தை ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள் என குற்றம்சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பாஜவுக்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023ல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பாஜவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

Advertisement

அதுமட்டுமல்ல, முறைகேடுகள் தொடர்பான தரவுகளை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில், திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த சிறப்பு முகாமில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை குடியுரிமை ஆவணங்களாக ஏற்கப்படவில்லை. இதனால் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. வாக்குகள் நீக்கம் குறித்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த ராகுல் காந்தி, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக தீவிர போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார். தேர்தல் ஆணையம் மீது முக்கியமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் குளறுபடியை கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் பீகாரில் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் பேரணி நடத்தி வருகிறார். இந்த யாத்திரை பீகார் மாநிலம் முழுவதும் சுமார் 1,300 கி.மீ வரை என மொத்தம் 16 நாட்கள் நடத்தப்படவுள்ளது. இந்த பயணம் செப்டம்பா் 1ம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. நடைப்பயணமாகவும், வாகன பயணமாகவும் 16 நாட்கள் 1,300 கி.மீ. தொலைவை கடந்து 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் அலைஅலையாக பங்கேற்று வருகின்றனர். இந்த நடைப்பயணத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று பீகாரில் நடைபெறும் நடைப்பயணத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராகுல்காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.35 மணியளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்றார். தனி விமானத்தில் முதல்வருடன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி, உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உடன் சென்றனர்.

முன்னதாக, நேற்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்று வழியனுப்பி வைத்தனர். பீகார் மாநிலத்தின் தர்பங்கா நகர விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்த தனி விமானம் நேற்று காலை 10 மணியளவில் தர்பங்கா நகர விமான நிலையத்தை சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு, அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை என்.எச்-57ல் ராகுல்காந்தி தலைமையில் நடந்த பிரமாண்ட யாத்திரையில் பங்கேற்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி, பிரியங்கா காந்தி எம்பி, கனிமொழி எம்பி ஆகியோர் பேரணியில் ஒரே வாகனத்தில் நின்று பயணம் செய்தனர். பேரணியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உங்களை எல்லாம் பார்ப்பதற்காகத்தான் இரண்டாயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன். பீகார் என்றாலே, மரியாதைக்குரிய லாலு பிரசாத் யாதவ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். சமூகநீதி - மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் அவர். தலைவர் கலைஞரும், லாலுவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள் - மிரட்டல்கள் வந்தாலும், பாஜவிற்கு பயப்படாமல் அரசியல் செய்த காரணத்தினால், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார், லாலு பிரசாத். அவரின் வழித்தடத்தில், அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் தேஜஸ்வி.

கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பீகார் மக்களின் பலம், ராகுல் காந்தியின் பலம், தேஜஸ்வியின் பலம். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பியிருக்கிறது. இதுதான் வரலாறு. ‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை அவர் திரட்டினார். அந்த பணியைத்தான், அருமை சகோதரர் ராகுல் காந்தியும், தம்பி தேஜஸ்வியும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செல்லும் இடம் எல்லாம், மக்கள் கடல் போல திரண்டு வருகிறார்கள். அதிலும், தேஜஸ்விகார் ஓட்ட, அதில் ராகுல் காந்தி பயணம் செய்த காட்சியை பார்த்தேன். ஏன், மோட்டார் சைக்கிள் பயணத்தையும் நான் பார்த்தேன். உங்களின் நட்பு, அரசியல் நட்பு மட்டும் கிடையாது; இரண்டு உடன்பிறப்புகளின் நட்பு.

ஜனநாயகத்தை காக்க - மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தர இருப்பதே இந்த நட்புதான். பாஜவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான் இந்த வெற்றியை தடுக்கப் பார்க்கிறார்கள். நியாயமாக - முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால், பாஜ கூட்டணி தோற்றுவிடும் என்று, மக்களான உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள். 65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில், பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா?

அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்களை அட்ரஸ் இல்லாதவர்கள் போன்று ஆக்குவது அழித்தொழிப்புதானே? சகோதரர்கள் ராகுலும் - தேஜஸ்வியும் பெற இருக்கும் வெற்றியை தடுக்க முடியாத பாஜ, கொல்லைப்புற வழியாக இந்த வேலையைப் பார்க்கிறது. இதற்கு எதிராக என்னுடைய சகோதரர்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தை வாழ்த்துவதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக, ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடிகளையும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால், முறையான ஒரு பதிலைக்கூட சொல்ல முடியவில்லை. ஆனால், ராகுல் காந்தி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்கிறார். இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா?

ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும் - கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது. ராகுல் காந்தியை பொறுத்தவரைக்கும், சும்மா அரசியலுக்காக - மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடன் பேசுபவர் அவர். இப்போது ஏன் பாஜ அவர் மேல் பாய்கிறார்கள் என்றால், பாஜ - தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பாஜவினர் அவர் மேல் பாய்கிறார்கள். மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜவின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள்.

அதைத்தான் பீகாரில் இப்போது கூடியிருக்கும் இந்த கூட்டம் எடுத்துக் காட்டுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கிருக்கும் பாட்னாவில்தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்த பாஜவின் கர்வத்தை தகர்த்த இடம்தான் இந்த பீகார். 400 இடம் என்று கனவு கண்டவர்களை, 240ல் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள், மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்று மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தார். பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு குவியும் மக்களின் கூட்டம் பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

* ‘இந்தியாவிற்கான வழக்கறிஞர் ராகுல் காந்தி’

அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே, இன்றைக்கு இந்தியாவிற்கான வழக்கறிஞராக இருக்கிறீர்கள். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும். இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும். மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று சகோதரர் தேஜஸ்வி காட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இரண்டு பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும் நிச்சயமாக - உறுதியாக நானும் பங்கேற்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பீகார் மக்களின் பலம், ராகுல் காந்தியின் பலம், தேஜஸ்வியின் பலம்.

* இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பியிருக்கிறது. இதுதான் வரலாறு.

* மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜவின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதைத்தான் பீகாரில் இப்போது கூடியிருக்கும் இந்த கூட்டம் எடுத்துக் காட்டுகிறது.

Advertisement