தென் அமெரிக்க நாடுகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பயணம்..!!
டெல்லி: மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்; மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு ராகுல் காந்தி செல்வார் என்றும் அங்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த தலைமுறை உலகத் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வரிவிதிப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்களிடம் அவர் விவாதிப்பார் என்றும் மாணவர்கள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி, பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்றும், நாடுகளின் அதிபர்கள் மற்றும் மூத்த தலைவர்களை ராகுல் காந்தி சந்திப்பார் என்றும் ஜனநாயக மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.