ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்.. டிவி நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தலைவர்: அமித் ஷாவிற்கு காங்கிரஸ் கடிதம்!!
டெல்லி: தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. கேரளாவின் மலையாள செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில், பா.ஜ.க ஊடகப் பேச்சாளரும், முன்னாள் ஏ.பி.வி.பி. தலைவருமான பிரிந்து மகாதேவ் என்பவர், ‘ராகுல் காந்தி நெஞ்சில் சுடப்படுவார்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘ராகுல்காந்திக்கு எதிராக விடுக்கப்பட்ட இந்த மிரட்டலானது, கொடூரமான கொலை மிரட்டல்; திட்டமிட்ட தூண்டுதல் செயலாகும். ஏற்கனவே ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் நடந்துள்ளன. இவ்விசயத்தில் உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது குற்றத்திற்குத் துணைபோவதாகவும், அவரது பதவிப் பிரமாணத்தை மீறிய செயலாகவும் கருதப்படும். ஊடக விவாதத்தில் பேசிய பேச்சாளரின் கருத்து, ஏதோ கவனக்குறைவான ஆவேசமான கருத்து அல்ல;
அவை ராகுல் காந்திக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த வளர்க்கப்படும் பெரிய, கொடூரமான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். கருத்து வேறுபாடுகள் அரசியலமைப்பு ரீதியான வழிகளில் தீர்க்கப்பட வேண்டுமே தவிர, வன்முறை மிரட்டல்களால் அல்ல’ என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பிரிந்து மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்காத கேரள அரசையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார். மகாதேவை ‘நாதூராம் கோட்சேவின் சீடர்’ என்று குறிப்பிட்ட அவர், பாஜகவுடனான கேரள அரசின் உடன்படிக்கையின் காரணமாகவே இந்த மெத்தனம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் சம்பவம், தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.