இந்தியாவின் சக்திவாய்ந்த போர் விமானமான ரஃபேல் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம்
சண்டிகர் : இந்தியாவின் சக்திவாய்ந்த போர் விமானமான ரஃபேல் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்டார். பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன. ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூரின் போது ரஃபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், ஆபரேசன் சிந்தூர் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததை பெருமைப்படுத்தும் விதமாக அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்டார். முன்னதாக ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தற்போது இந்த பயணத்தின் மூலமாக ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசு தலைவர் என்ற பெருமையை திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.
ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரௌபதி முர்மு பயணம் செய்துள்ளார். அப்போது, தேஸ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து சுமார் 30 நிமிடங்கள் வான்வழிப் பயணத்தை மேற்கொண்ட திரெளபதி முர்மு, இமயமலை, பிரம்மபுத்ரா நதி மற்றும் தேஸ்பூர் பள்ளத்தாக்கின் மீது பறந்தார்.இதற்கு முன்பு முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் நாட்டுத் தலைவர் ஆனார்.