ராதாபுரம் யூனியன் அலுவலகம் முன்பு பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி இழுபறி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்
வள்ளியூர்: ராதாபுரம் யூனியன் அலுவலகம் முன்பு பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராதாபுரம் யூனியன் அலுவலகம் முன்பு பேருந்து நிழற்குடை கட்டுவதற்கு கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த வித பணிகளும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக புகார் சென்ற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. மழைக்காலத்திற்கு முன்பே பேருந்து நிழற்குடை பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
தற்போது வடக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து நிழற்குடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ராதை காமராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.