ராதாபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
கூடங்குளம் : ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியை வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
இதனை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன் ஜெயக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சிலம்பம், ஜூடோ ஆகிய தற்காப்புக் கலைகள் பயிற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலம்பம் பயிற்சியை பயிற்சியாளர் விவேகானந்தனும், ஜூடோ பயிற்சியை பயிற்சியாளர் கார்த்திகேயனும் வழங்குகின்றனர்.
3 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர் லில்லி, உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயராமன், ஸ்டெல்லா ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர். மாணவிகளின் தன்னம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்று உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.