395 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: தமிழக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 395 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்ற 2800 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் செயல்படும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 395 ஆசிரியர்கள் மேற்கண்ட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மேற்கண்ட விருதுகளையும், பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2800 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆணைகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இதற்கான விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சிறப்புரையாற்றினார். மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, இவர்கள் தவிர, சென்னை நகர மேயர் பிரியா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி,தென் சென்ைன நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று, விருது மற்றும் பண முடிப்பும் வழங்கப்பட்டது. புதிய பணி நியமனம் பெறும் ஆசிரியர்களில் தொடக்கமாக 40 பேருக்கு நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.