தமிழகத்தின் 3வது பெரிய ஏரி காவேரிப்பாக்கம் ஏரி நீர்மட்டத்தை கண்காணிக்க ரேடார் பொருத்தம்
*சென்னை பேரிடர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பும்
காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணிக்க மூலமதகு பகுதியில் ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் செம்பரம்பாக்கம், மதுராந்தகத்தை அடுத்து 3வது பெரிய ஏரியாக காவேரிப்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரி கிபி 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கர்ஆகும்.
காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக கால்வாய் மூலம் விவசாய நிலங்களுக்கு நேரடியாக தண்ணீர் திறக்கப்படும்.இதன் மூலம் காவேரிப்பாக்கம், கொண்டாபுரம், கட்டளை, சேரி, அய்யம்பேட்டை, உள்ளிட்ட 14 கிராமங்களில் 6,278 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது காவேரிப்பாக்கம் ஏரியில் 27.7 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது.
ஆனால் ஏரியின் முழு கொள்ளளவான 30.65 அடி தண்ணீர் நிரப்பப்படவில்லை. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைவாசல் பகுதியில் இருந்து, வினாடிக்கு 400கன அடி தண்ணீர் வீதம் கடந்த 10ம் தேதி முதல் திறந்து விடப்பட்டது. மேலும் ஏரிக்கு கால்வாய் மூலம் 442 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாகவும், ஏரியில் இருந்து வினாடிக்கு 232கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் ஏரியின் மூலமதகு பகுதியில் ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலமாக சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் இருந்து நீர் இருப்பு கண்காணிக்கப்படுகின்றன. இந்த ரேடாரில் இருந்து கிடைக்கும் தகவல்கள், சென்னை பேரிடர் மேலாண்மை அலுவலகம், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம், காவேரிப்பாக்கம் நீர்வளத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படும்.
இக்கருவியின் மூலம் மழைக்காலங்களில் ஏரியில் உள்ள நீர் இருப்பு விவரங்கள், உபரி நீர் விவரங்கள் ஆகியனவும் கண்காணிக்கப்பட்டு, எச்சரிக்கை செய்ய பயன்படுகிறது. இதேபோல் பாணாவரம் அருகே உள்ள மகேந்திவாடி ஏரி பகுதியிலும் இந்த ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது வடக்கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இரவு பகலாக உதவி செயற்பொறியாளர் குமார் தலைமையில், உதவி பொறியாளர் மெய்யழகன் மேற்பார்வையில், பணி ஆய்வாளர் மாரி, பாசன உதவியாளர்கள் ரகோத்தமன், வெங்கடேசன், தொழில்நுட்ப உதவியாளர் செபாஸ்டியன் இளவரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.