ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்..? அஜித் குமார் பேட்டி
பார்சிலோனா: தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை இலச்சினையை தனது ரேஸ் காரில் பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நடிகர் அஜித் குமார் பதிலளித்துள்ளார். சர்வதேச போட்டியின்போது நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் அஜித்குமார் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார். தங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தங்களுக்குத் துணை நின்று வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உயரிய இலக்குகளை நோக்கி அஜித்குமார் ரேஸிங் அணி முழு முயற்சியுடன் பயணிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சென்னையில் கடந்த ஆண்டு ‘ஸ்ட்ரீட் ரேஸ்’ கார் பந்தயத்தை தமிழ்நாடு அரசு நடத்தியது. என்னைப் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தது. அதுமட்டுமின்றி வேறு பல விளையாட்டுகளுகும் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை நாங்கள் உடையில் அணிகிறோம்” என்று அஜித் குமார் கூறியுள்ளார்.