மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். நாய்கள் கடிப்பதால் மட்டும் ரேபிஸ் வருவதில்லை. வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதாலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. நாய் கடித்தவுடன் அந்த காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். மேலும் தடுப்பூசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபிஸ் நோயை 100 சதவீதம் வரவிடாமல் தடுத்து விடலாம்.
அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று, ரேபிஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். சிலர் நாய் கடித்த உடன் நாட்டுவைத்தியம் பார்க்கிறார்கள். அதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது. ஒரு நபர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதால் இறந்துவிட்டார். எனவே, நாய் கடியால் பாதிக்கப்படும் மக்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.