முயல் வளர்ப்பில் 30 ஆண்டு அனுபவம்!
நான் 30 வருஷமா முயல் வளர்க்கிறேன். மொதல்ல 6 முயல் இருந்துச்சி. இப்போ என் முயல் பண்ணையில 300 முயல்கள் இருக்கு” என பேச ஆரம்பித்தார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தரகாளத்தி. முயல் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபடத் தொடங்கிய இவர், இப்போது அதை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றி இருக்கிறார். அவரைச் சந்தித்து பேசினோம். ``நாங்க பட்டுத்துணி நெய்றவங்க. தொழில் சரியா போகாதப்ப எல்லாரும் ஆடு மாடு கோழின்னு வளக்க ஆரம்பிச்சாங்க. நான் முயல் வளர்க்கத் தொடங்கினேன். என் ஃப்ரண்டுகிட்ட சில முயல்கள் இருந்துச்சி. அவனால பாத்துக்க முடியலன்னு என்னை எடுத்துட்டு போகச் சொன்னான். மொதல்ல 4 பெண் முயல் 2 ஆண் முயல் இருந்துச்சி. அது நியூஸிலாந்து ஒயிட்ன்ற சின்ன இனம். அப்புறம் கொடைக்கானல்ல இருக்குற சென்ட்ரல் கவர்ன்மெண்ட்டோட ஃபார்ம்ல இருந்து முயல்கள் வாங்கி வளக்க ஆரம்பிச்சேன். அதுலர்ந்து குட்டிகள் உற்பத்தியாகி உற்பத்தியாகி அப்டியே எண்ணிக்கை அதிகரிச்சிடுச்சி” என அவர் முயல்வளர்ப்பில் ஈடுபட்டதைப் பற்றி கூறினார்.
``முயல்களை கூண்டு முறையில வளர்க்கறது நல்லது. கழிவுகள் எல்லாம் கீழ விழுந்துடும். கூண்டு சுத்தமா இருக்கும். கிழக்கு மேற்கா ஷெட் போட்டா, வெயிலோட தாக்கம் குறைவா இருக்கும். கீத்துக்கொட்டா, ஆஸ்பஸ்டாஷ் ஷீட், ஹுண்டாய் ஷெட் போட்டுக்கலாம். முயல் கூண்டு 2 அடிக்கு 2 அடி இருக்கணும். கூண்டோட உயரம் ஒன்றரை அடி இருக்கணும். முயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூண்டு தயார் செஞ்சிக்கணும். ஜிஐ, கலாய் மாதிரி இரும்பு கூண்டு, ஒரு கூண்டுக்கு 2500 ரூபாய் ஆகும். முயலோட இனங்கள்ல 37 வகை இருக்கறதா சொல்றாங்க. ஆனா, நம்ம கிளைமேட்டுக்கு அந்தந்த இடங்கள்ல கிடைக்கறத வாங்கி வளர்க்கறது நல்லது. நான் மன்னவனூர்லர்ந்து வாங்கிட்டு வந்தது குளிர் பிரதேசத்துல வளரக்கூடியது. அது சரியா வளரல. நியூஸிலாந்து ஒயிட்டும், சோவியத் சின்சில் வகையும் ரெண்டும் சேர்றது மூலமாகக் கிடைக்கக்கூடிய கலப்பின முயல்கள், நம்ம ஊருக்கு நல்லா வளருது. இது செவலக் கலர்ல வரும். தீவனமா கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் இதெல்லாம் அரைச்சி கவர்ண்மண்ட்லயே விக்கறாங்க. அதையே வாங்கிக் குடுக்கறோம். முயல் பண்ணை ஆரம்பிக்கறவங்க ரொம்ப குட்டியா வாங்காம, ஒரு மூனுமாத குட்டியா வாங்கணும். முதல்ல 4 பெண்முயல், 2 ஆண்முயல் வாங்கிட்டா போதும். அதற்கு மட்டும் கூண்டு அமைச்சி வளக்கணும். அப்டி வளக்கும்போது முயலோட எண்ணிக்கை தானா அதிகரிக்கும்.முயல் வளக்கறவங்களுக்கு இதோட நெளிவுசுளிவுகள் புரியும். அனுபவம் கிடைக்கும்.
முயலுக்கு தீவனமா கம்பு 10 கிலோ, மக்காச்சோளம் 10 கிலோ, கேழ்வரகு 10 கிலோ, புண்ணாக்கு வகைகள் ஒரு 30 கிலோ, தவிடு வகைகள் 35 கிலோ போட்டு தாது உப்பு 2 கிலோ, சாப்பாட்டு உப்பு 1 கிலோ போட்டு தீவனம் ரெடி பண்ணி வச்சிக்கலாம். அரசுகிட்ட வாங்கறதுக்கும் நாமளா செய்றதுக்கும் செலவு ஒண்ணுதான். நாமளா செஞ்சா அலைச்சல் அதிகமா இருக்கும். நம்ம ரெடி பண்றத விட கவர்மண்ட் ரெடி பண்றது நல்லா இருக்கும். ஏன்னா, நமக்கு சில மெட்டீரியல்ஸ் கிடைக்காது. துத்தநாகம் உப்பெல்லாம் அவங்க மிக்ஸ் பண்ணி குடுப்பாங்க. அது நமக்கு எளிதா கிடைக்காது. அதனால கவர்மண்ட் கிட்ட வாங்கிக்கறது ரொம்ப நல்லது. தீவனம் ஒரு கிலோ 7 ரூபாய்க்கு வாங்கறோம். ஒரு முயல் ஒரு நாளைக்கு 3ரூபா 50 காசுக்கு தீவனம் கண்டிப்பா சாப்பிடும்” என வளர்ப்பு குறித்து விளக்கினார். “ ஆண் முயலையும் பெண் முயலையும் தனியாத்தான் வைக்கணும். ரெண்டும் ஒன்னா இருந்தா எப்ப இணைகூடுது எப்ப குட்டிபோடுதுன்னு நமக்குத் தெரியாது. இணைகூடுறதுக்கு சாயந்திரம் 6 மணிக்கு மேல ஒரே கூண்டுல போடுறது நல்லது. இரவெல்லாம் கூட விடலாம். அடுத்த நள் ரெண்டையும் தனித்தனி கூண்டுல விடணும். அன்னையிலர்ந்து 30வது நாள் குட்டி போட்டுடும். ஒரே நேரத்துல 6லர்ந்து 7 குட்டிகள் போடும். ஒரு குட்டியோட எடை 30 கிராம் இருக்கும். தாய்முயலுக்கு தரமா நல்ல உணவு குடுத்தா, அதுங்க குட்டிங்களுக்கு நல்லா பால் குடுக்கும்” என்கிறார். (முயல் குட்டிகளின் விற்பனை குறித்த தகவல் அடுத்த இதழில் இடம்பெறும்)
தொடர்புக்கு:
சுந்தரகாளத்தி:
89402 53945.