நடப்பு ஆண்டு 2ம் காலாண்டில் ஐஓபி நிகர லாபம் ரூ.1,226 கோடியானது: 57.79 சதவீதம் அதிகரிப்பு
சென்னை: நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2ம் காலாண்டில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் ரூ.1,226 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டு மற்றும் அரையாண்டு நிதி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு நிதியாண்டில் செப்டம்பருடன் முடிந்த 2ம் காலாண்டில் நிகர லாபம் ரூ.1,226 கோடி ஈட்டியுள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 57.79 சதவீத உயர்வாகும். இந்த காலக்கட்டத்தில் இயக்க லாபம் 12.78 சதவீதம் அதிகரித்து ரூ.2,400 கோடியாக உயர்ந்துள்ளது. இதுபோல் நிகர வட்டி வருவாய் 20.53 சதவீதம் அதிகரித்து ரூ.3,059 கோடியாகியுள்ளது. மொத்த வர்த்தகம் முந்தைய ஆண்டை விட 14.1 சதவீதம் உயர்ந்து ரூ.6,17,034 கோாடியாகவும், மொத்த வைப்புத்தொகை 9.15 சதவீதம் உயர்ந்து ரூ.3,39,066 கோடியாகவும் உள்ளது.
நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு (காசா) டெபாசிட்கள் 4.19 சதவீதம் அதிகரித்து ரூ.1,37,387 கோடியாக உள்ளது. கடந்த 30.9.2025 தேதிப்படி காசா விகிதம் 40.52 சதவீதம். இதுபோல் கடன் வழங்கல் 20.78 சதவீதம் உயர்ந்து ரூ.2,77,968 கோடியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் அரையாண்டை பொறுத்தவரை நிகர லாபம் ரூ.2,337 கோடியாகவும், இயக்க லாபம் ரூ.4,758 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் ரூ.5,805 கோடியாகவும் உள்ளது. இவ்வாறு ஐஓபி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.