காலாண்டு தேர்வு விடுமுறை கவியருவியில் 2 நாட்களில் 3000 சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு காலாண்டு விடுமுறை நாட்களையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.முக்கிய பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
இந்த மாத்தில் கடந்த இரண்டு வாரமாக பள்ளி காலாண்டு தேர்வு என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாக இருந்துள்ளது.இந்நிலையில், பள்ளி காலாண்டு தேர்வு நிறைவடைந்து நேற்று முன்தினம் முதல் விடுமுறையால் கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் கவியருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.இதில் நேற்று, கவியருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
சமீபத்தில் சில நாட்கள் பெய்த மழையால் கவியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும், கூட்டம் அதிகளவில் இருந்ததால் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து குளித்து சென்றனர். சிறுவர்கள் மற்றும் பெண்கள் பலர் அருகே குளம்போல் தேங்கிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
பள்ளி காலாண்டு விடுமுறையால் நேற்று, நேற்று முன்தினம் என கடந்த இரண்டு நாளில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், நவமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் விதிமீறி வனத்திற்குள் செல்கின்றார்களா என்று வனக்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.