குறைந்த விலையில் தரமான உணவு வகைகள் கிடைக்க நாகர்கோவில், கன்னியாகுமரியில் ரயில் பெட்டி உணவகம் வருமா..? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில், கன்னியாகுமரியில் ரயில் பெட்டி உணவகம் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு, கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்தீரிகர்கள் வருகை அதிகரித்துள்ளது. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவு ஆகிய இரண்டும் நிகழும் ஒரே இடம் கன்னியாகுமரி ஆகும். இ
ந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், மற்றும் வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் இங்கு தான் உள்ளது. சர்வதேச அளவில் கன்னியாகுமரி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் தை பொங்கல் வரை சீசன் காலமாக உள்ளது. இந்த சீசன் காலத்தில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு சீசன் கால கட்டம் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில், ரயில் பெட்டி உணவகம் தொடங்கப்பட வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினரும், சுற்றுலா பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரயில் பெட்டி உணவகம் என்பது பழைய ரயில் பெட்டிகள் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு தனித்துவமான உணவகமாகும். இது பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்குகிறது. இந்த உணவகங்கள் பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் அமைக்கப்படுகின்றன. ரயில்வே துறை வருவாய் அதிகரிக்கும் நோக்கத்துடன் ரயில்கள் இயக்கம் மட்டும் சார்ந்து இருக்காமல் வேறு பல்வேறு வழிகளிலிருந்து கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கில், இந்திய ரயில்வே பழைய ரயில் பெட்டியை புதுப்பித்து, ரயில் நிலைய உணவகமாக மாற்றி வருவாயை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் பல்வேறு ரயில் நிலையங்களில் இது போன்ற ரயில் பெட்டி உணவகம் அமைத்து நல்ல வருவாய் ஈட்டி வருகிறது. இந்த ரயில் பெட்டி உணவகத்தில் மக்களுக்கு பல்வேறு உணவு வகைகள் நல்ல தரத்துடன், நியாயமான விலையில் வழங்கப்படுகிறது. ரயில் பெட்டி உணவகங்களில் வட இந்திய, தென் இந்திய மற்றும் சீன உணவு வகைகள் உட்பட பல்வேறு உணவுகளை வழங்குகிறது. இது போன்ற ரயில் பெட்டி உணவகம் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் அமைத்தால் நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும், யாத்ரீகர்களுக்கும் பலன் உள்ளதாக இருக்கும் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கூறி உள்ளது.
இந்த ரயில் பெட்டி உணவகத்தில் ரயில் பயணிகள் மட்டுமின்றி கன்னியாகுமரி சுற்றுலா வரும் பயணிகள் வந்து உணவு அருந்தும் விதத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும். சுமார் 10 முதல் 20 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சுமார் 20 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று இன்டர்லாக் வசதியுடன் கூடிய தரை அமைத்து நிறுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா பேருந்துகளில் ஒரே நேரத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவர்கள் வசதிக்காக சுற்றுலா பேருந்து நிறுத்தும் இடம் கழிப்பிட வசதி போன்ற வசதிகள் கூடுதலாக ரயில் நிலையத்தில் ஏற்படுத்த வேண்டும்.
இந்த ரயில் பெட்டி உணவகம் மற்றும் அதை சுற்றிய பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும். ரயில் பெட்டி உணவகத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் சாதாரண பெட்டி என இரண்டு வகையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். ரயில் பெட்டி உணவகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரிய உணவுகள், தின்பண்டங்கள் போன்றவைகள் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். கன்னியாகுமரி ரயில் நிலைய மேம்பாட்டு பணியில் இந்த திட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர் மற்றும் தஞ்சாவூர் ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.