கத்தார், துருக்கி பேச்சுவார்த்தையால் சமரசம் ஆப்கன் - பாகிஸ்தான் போர் நிறுத்தம்
தோஹா: கத்தார் மற்றும் துருக்கி நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தையை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உடனடியாகப் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) தீவிரவாதக் குழுக்கள், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதன் காரணமாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பலர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதேபோல் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது தாக்குதல்களை முன்னெடுத்தத. இதில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள், பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் கத்தார் மற்றும் துருக்கி ஆகியவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தின.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது யாகூப் ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டன.
இதுகுறித்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பலப்படுத்துவதற்கான வழிமுறைகளை நிறுவுவதற்கும், உடனடி போர் நிறுத்தத்துக்கும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உடன்படிக்கையால் எல்லையில் நிலவி வந்த போர் பதற்றம் தணிந்துள்ளது.