புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கைதி குடும்பத்தினரை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கைதியை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், சிறையில் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், சிறையில் தன்னை சந்திக்க, அத்தையுடன் வந்த மகன் மற்றும் மகளை சிறைக்குள் விடாமல் வெளியே அனுப்பி விட்டனர். இலங்கையில் உள்ள தனது தாயுடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கும் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளதால் குடும்பத்தினரை சந்திக்க சிறப்பு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, தமிழ்நாடு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் தங்களது குடும்பத்தினரை சந்திப்பதற்கும், தொலைபேசி மூலம் பேசுவதற்கும் விதிகளை வகுத்து கடந்த ஏப்ரல் மாதம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மனுதாரருக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின் படி மனுதாரரை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்குமாறு புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.