புழல் ஏரி உபரி நீர் திறப்பு: கால்வாய் ஓரம் வசிப்பவர்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
சென்னை: புழல் ஏரியில் 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கால்வாய் ஓரம் வசிப்பவர்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர் வரத்து உள்ளது.3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரி 90 சதவீதத்துக்கு மேல் நிரம்பியதை அடுத்து பாதுகாப்பு கருதி முதல் கட்டமாக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார்.
தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மிக கனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருதூர், திருவைகுண்டம், அணைக்கட்டு உள்ளிட்ட தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல். தாமிரபரணி ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அனைத்து நீர்நிலைகளையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.