புஸ்ஸி ஆனந்தை தூக்கிலவா போட போறாங்க... விமானத்தில் ஏறி போன விஜய் இன்று வரை வெளியே வரல... 41 பேர் பலி குறித்து பிரேமலதா விமர்சனம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் என்ற ரத யாத்திரை, பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசியதாவது: கரூரில் நடந்த பரப்புரை நிகழ்ச்சியில் 41 பேர் உயிர்களை இழந்துள்ளனர். அவர்களது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
நான் நேரடியாக சென்று பார்த்தேன். அப்பாவி மக்களை சந்திக்க, தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. கடமை உணர்வை தவறினார் விஜய். சூட்டிங்கிற்கு சரியாக செல்ல கூடிய விஜய், கரூருக்கு தாமதமாக வந்தார். அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா?. வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது. விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறுகிறீர்கள்.
அண்ணன் என்ன செய்தார் என பார்த்து நீங்கள் செயல்படுங்கள். கரூர் சம்பவம் நடந்ததும் விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர், இன்று வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். நிதியுதவியை நேரில் கொடுக்க வேண்டும். தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜயும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை. புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு என்கிறார்கள். தூக்கிலவா போட போகிறார்கள்?. நேரில் வந்து சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.