சிங்கம்புணரி அருகே புரவி எடுப்பு திருவிழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மாந்தகுடிபட்டி கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, கிராம மந்தையில் குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு புரவிகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புரவி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் மந்தையில் கூடி வழிபாடு செய்தனர்.
இதையடுத்து, அரண்மனை புரவி முன்செல்ல, ஊர் குதிரை மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் யானை, காளை, மதலை, நாகம், பைரவர், எலி, பாதம், கண் உள்ளிட்ட புரவிகளை சுமந்து பின்தொடர்ந்து சென்றனர். புரவிகள் அனைத்தும் பிள்ளையார் கோயிலில் இறக்கி வைக்கப்பட்டு, கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் வழிபட்டனர். பின்னர், அங்கிருந்து புரவிகளை சுமந்து அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.