புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமை, மகாளய அமாவாசை எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்: காசிமேட்டில் மக்கள் கூட்டம் குறைந்தது, வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை சரிவு
சென்னை: புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, மகாளய அமாவாசை காரணமாக நேற்று சென்னையில் இறைச்சிக் கடைகளில் மட்டன், சிக்கன் விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. காசிமேட்டில் மக்கள் கூட்டம் என்பது வெகுவாக குறைந்திருந்தது. வரத்து அதிகரிப்பால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள்.
அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்தது. அதே நேரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம். இந்த நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அசைவ உணவு இருக்கும். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், சிக்கன், மட்டன் விற்பனை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் நேற்று மகாளய அமாவாசை வேறு. அது மட்டுமல்லாமல் புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையும் கூட.
இதனால் பொதுமக்கள் அசைவ உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக நேற்று சிக்கன், மட்டன் விற்பனை மந்தமாகவே இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைகத்தில் நேற்று காலை மக்கள் கூட்டம் இல்லாமல் களை இழந்து காணப்பட்டது. அதே நேரத்தில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைகளுக்கு திரும்பினர். இதனால், மீன்வரத்து என்பது அதிகமாக இருந்தது. ஆனால், தேவை குறைந்து, விற்பனையும் குறைந்ததால் விலை சரிந்து காணப்பட்டது.
அதாவது வஞ்சிரம் ரூ.1,200 லிருந்து ரூ.800 ஆகவும், சங்கரா ரூ.500லிருந்து ரூ.300, வவ்வால் ரூ.900லிருந்து ரூ.600க்கும் விற்கப்பட்டது. இதே போல சீலா ரூ.300, நெத்திலி ரூ.200, கொடுவா ரூ.600, இறால் ரூ.350, டைகர் இறால் ரூ.800, நண்டு ரூ.300, நவரை ரூ.300, பண்ணா ரூ.300, காணங்கத்தை ரூ.300, கடம்பா ரூ.300, நாக்கு மீன் ரூ.350க்கும் விற்கப்பட்டது.
விலை குறைந்து இருந்த போதும் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் விற்பனையாகவில்லை என்று மீன்வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல எப்போதும் பரபரப்பாக இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. விற்பனை குறைந்தாலும் சிக்கன், மட்டன் விலையில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. இந்த மந்த நிலை புரட்டாசி மாதம் முடியும் வரை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.