புரட்டாசி மாதம், மகாளய அமாவாசை எதிரொலி மீன்கள் விலை வீழ்ச்சி; வெறிச்சோடிய மார்க்கெட்
கோவை : புரட்டாசி மாதம் மற்றும் மகாளய அமாவாசை என்பதால், கோவை மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், பொதுமக்கள் கூட்டமின்றி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. புரட்டாசி மாதம் கடந்த வாரம் தொடங்கியது.
பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பலர் இம்மாதத்தில் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இதனால், அவர்கள் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்பது கிடையாது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மகாளய அமாசாசையும் வந்தது. இதனால் கோவையில் இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை மந்தமாக இருந்தது.
உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகை, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில கடலோர மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர ஆழியாறு, திருமூர்த்தி அணை மீன்களும் விற்பனைக்கு வருகிறது.
புரட்டாசி மாதம் துவங்கியதால் மீன் மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட மீன் வரத்து குறைந்தது.மீன் வாங்குவதற்கும் குறைவான மக்களே வருகை புரிந்தனர். அவர்கள் மீன் விலை குறைவாக இருந்ததால், அதிகமான மீன்களை வாங்கி சென்றனர்.
மேலும், மார்க்கெட்டில் மத்தி,அயில மீன் இரண்டு கிலோ ரூ.150-க்கும்,வாவல் ஒரு கிலோ ரூ.130,கூலி மீன் ரூ.100, வஞ்சிரம் சிறியது ரூ.300,நண்டு ரூ.350, கிழங்கா மீன் ரூ.100, செம்மீன் ரூ.300-க்கு விற்பனையானது. பல்வேறு மீன்கள் ஒரு கிலோ ரூ.200-க்கு கீழ் விற்பனையானது. புரட்டாசி மாதம் ஆரம்பித்ததால் அடுத்த ஒரு மாதம் மீன் வியாபாரம் மந்தமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், கோழி, மட்டன் இறைச்சி கடைகளிலும் விற்பனை மந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.