பஞ்சாப் உயர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு திருமணமான பெண்ணுடனான உறவு பலாத்காரம் ஆகாது: கள்ளக்காதலனுக்கு விதிக்கப்பட்ட 9 ஆண்டு சிறைதண்டனையும் ரத்து
சண்டிகர்: பஞ்சாப்பைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் கடந்த 2012-13 காலகட்டத்தில் பாலியல் உறவில் இருந்துள்ளார். அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து 50க்கும் மேற்பட்ட முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர், அந்தப் பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இவ்விவகாரம் குறித்து அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு அந்த இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த இளைஞர் தரப்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஷாலினி சிங் நாக்பால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து அந்த இளைஞரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில், ‘புகார் அளித்த பெண், இரண்டு குழந்தைகளின் தாய். குற்றம்சாட்டப்பட்டவரை விட 10 வயது மூத்தவர். அவர் ஒன்றும் அறியாத அப்பாவி பெண் அல்ல. திருமண பந்தத்தில் இருக்கும்போதே, திருமண வாக்குறுதியை நம்பி பாலியல் உறவுக்கு சம்மதிப்பது, ஒழுக்கக்கேடான மற்றும் திருமண பந்தத்தை அவமதிக்கும் செயலாகும்.
இதை சட்டப்படி பாலியல் பலாத்காரமாக கருத முடியாது. இருவரின் சம்மதத்துடன் நடந்த பாலியல் உறவானது ஒரு கட்டத்தில் கசப்பான முடிவை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பாலியல் பலாத்காரம் போன்ற கடுமையான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கக் கூடாது’ என்று குறிப்பிட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்தார்.