பஞ்சாபில் அமிர்தசரஸ் விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து : அலறியடித்து ஓடிய பயணிகள்
சிர்ஹிந்த்; பஞ்சாபில் அமிர்தசரஸ் விரைவு ரயிலின் பெட்டியில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றில் இருந்து புகை வந்துள்ளது.
இதைக்கண்ட பயணி ஒருவர் உடனடியாக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தார். அடுத்த சில விநாடிகளில் ரயில் நிற்க, பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் பீதியில் இறங்கினர். குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கீழே குதித்த சிலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்களும், மீட்புக்குழுவினரும் எரிந்த பெட்டியை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இந்த விபத்தில் ரயிலின் 19வது பெட்டி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. 18வது பெட்டியும் லேசான சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் இந்த ரயில் அம்பாலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு மாற்று பெட்டிகள் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.