பல்சர் பைக் முன் நின்று போட்டோ இந்திய நிறுவனங்கள் குறித்து ராகுல் பெருமை
புதுடெல்லி: இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தென் அமெரிக்காவில் நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொலம்பியாவில் இஐஏ பல்கலைக்கழகத்தில் இன்றைய எதிர்காலம் என்ற தலைப்பில் ராகுல் உரையாற்றினார்.
இந்நிலையில் ராகுல்காந்தி பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் முன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். இந்த படத்தை தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல்,‘‘பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நிறுவனங்கள் சலுகைகள் மூலமாக அல்ல புதுமையால் வெல்ல முடியும் என்பதை இது காட்டுகின்றது. சிறந்த பணி” என்று குறிப்பிட்டுள்ளார்.