புதுக்கோட்டை மாவட்டத்தின் வல்லநாடு கண்மாயில் தூர்வாரும் பணிகள்: கண்மாய் முழுவதும் நிறைந்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு கண்மாயில் தூர்வாரும் பணிக்கு இடையூறாக இருக்கும் உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் 15 மின்கம்பங்களை அகற்றி மாற்றுப்பாதையில் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையக்குடி தொடங்கி வல்லத்திராக்கோட்டை வரை சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ள வல்லநாடு கண்மாய், புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரிய கண்மாயாக திகழ்ந்து வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் மூலம் பூவரசகுடி, மணியம்பள்ளம், வாண்டாக்கோட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், வல்லநாடு கண்மாயில் அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு உயர் நீதிமன்றம் நீதிபதி சுரேஷ் குமார் அறிவுறுத்தலின் பேரில் 10 கிராம மக்களின் முயற்சியில் தூர்வாரும் பணியும், கரைகளை பலப்படுத்தும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு இடையூறாக உள்ள கண்மாய் கரைகளில் உள்ள 15 மின்கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்ற மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கண்மாய் முழுவதும் நிறைந்துள்ள கருவேல மரங்களை அகற்றவும். புதுக்கோட்டை மாநகராட்சி கழிவு நீர் கண்மாயில் கலக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.