50% வரியால் புதுக்கோட்டை மீனவர்கள் பாதிப்பு: தொழிலை விடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் கவலை
புதுக்கோட்டை: அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை சுமார் 1 லட்சம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட பெரிய இறால், நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள், சிறு, குறு இறால் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டுகளை கணிசமான விலைக்கு வாங்கி நிறுவனங்கள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்கின்றன. தாங்கள் பிடித்து வரும் இறால், நண்டுகளை ரூ.400 முதல் ரூ.600 வரை ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வந்தன.
50% வரியால் தற்போது ரூ.200 முதல் ரூ.150 வரைக்கு மட்டுமே இறால், நண்டுகளை ஏற்றுமதி நிறுவனங்கள் வாங்குவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இறால், நண்டுகளுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் தொழிலை விடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.