புதுக்கோட்டையில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்த ஒன்றியக் குழு ஆய்வு ஒத்திவைப்பு..!!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்த ஒன்றியக் குழு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது இதனால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தொடர்ந்து நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு சார்பில் 3 குழுக்கள் இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தது. பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் ஒன்றிய குழு. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வர திட்டமிட்டிருந்தது. கந்தர்வகோட்டையிலிருந்து ஒன்றிய குழுவினர் ஆய்வை தொடங்க இருந்தனர்.
கல்லாக்கோட்டை, குலத்துநாயகர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய இருந்தனர். இந்த நிலையில், திருச்சியில் இன்று ஆய்வு குழு ஆய்வை தொடங்க இருந்த நிலையில் மதிய வேலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒன்றிய குழுவில் உள்ள 3வது குழு புதுக்கோட்டைக்கு வருகை தர இருந்தனர். இந்த குழு நாமக்கல் மாவட்டத்திற்கு செல்வதால் இன்று திட்டமிட்டபடி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள முடியாது. இன்று திட்டமிட்ட ஆய்வு பணிகள் அனைத்தும் நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.