புதுக்கோட்டை, அறந்தாங்கி நான்கு வழிச்சாலை பணிகள்
*மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை : தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி நெடுஞ்சாலைதுறை அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளர் வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலை துறையில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டை, அறந்தாங்கி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி - புதுக்கோட்டை - அறந்தாங்கி- மீமிசல் சாலை வரை இருவழி தடத்தை நான்கு வழி தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிக்காக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.19 கோடி மதிப்பீட்டில் கைக்குறிச்சி முதல் பூவரசக்குடி வரை 3 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைமேம்பாட்டுப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பூவரசக்குடி முதல் வல்லத்திராக்கோட்டை வரை 3 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைமேம்பாட்டுப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த சாலைப் பணியில் மேல் அடுக்கு நிலக்கீழ் கலவை பணிகள் நடைபெற்று வருகிறது.
மையத்தடுப்பான், மழைநீர் வடிகால், பாலம் அகலப்படுத்துதல் மற்றும் திரும்பக் கட்டுதல் பணிகள் முடிவுற்றுள்ளது. இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அறந்தாங்கி கோட்டபொறியாளர் மாதேஸ்வரன் ஆலங்குடி உதவி கோட்டபொறியாளர் ரவிச்சந்திரன், உதவிபொறியாளர் தியாகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.