புதுச்சேரியில் செய்தியாளரை தாக்கிய வழக்கு: சீமானுக்கு புதுவை போலீசார் சம்மன்
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் கடந்த நவ.23ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்ேபாது தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கும், சீமானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சீமான் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள், செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை யாரையும் கைது செய்யாத நிலையில் 2 பேரை பிடித்து நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகனிடம் கேட்டபோது, செய்தியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக சீமான் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்திலேயே ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவின் கீழ் தான் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்தியால்பேட்டை சுந்தரபாண்டி, கடலூர் செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகி செய்தியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்தனர். மேலும் இந்த வழக்கில் வருகிற 8ம் தேதி வில்லியனூர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.