புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..!!
சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை எதிர்த்து மாணவர்கள் பல நாட்களாக நிர்வாகக் கட்டடத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
பல்கலைக்கழகத்தின் உள்ளகப் புகார் குழு (ICC) செயலிழந்து, புகாரளித்த மாணவிகளுக்கு நீதி வழங்கத் தவறி, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலைப்பாடு எடுத்திருப்பதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை மவுனமாகக் கடந்து செல்வதும் அதில் நடுநிலையாக வகிப்பதும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பாகும்.
மாணவிகள் பாதுகாப்பாகக் கல்வி கற்க வேண்டிய இடமான பல்கலைக்கழகம் இப்படி ஒரு அநீதியின் தளமாக மாறுவது கல்வித் துறையின் அடிப்படை மதிப்புகளையே மீறுவதாகும். புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் வீரியமாக எழுப்பியுள்ள உள்ளகப் புகார் குழு (ICC) வை மீள அமைக்கவும், வெளிப்படையான விசாரணை நடத்தவும், அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
உள்ளிட்ட நியாயமான மாணவர்களின் கோரிக்கை களுக்குச் செவிசாய்க்காமல் வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரிய செயலாகும். பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தச் சம்பவத்தைத் தாமாகவே கவனத்தில் கொண்டு,
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் விசாகா வழிகாட்டுதல்களும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளும் முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.“நீதி கிடைக்கும் வரை ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்” எனப் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் எழுப்பிய கோஷம், கல்வி நிலையங்களில் நீதி மற்றும் சமத்துவத்துக்காக எழும் குரலாக ஒலிக்கிறது. என தெரிவித்தார்